அட்சய திருதியை அன்று தண்ணீர் தானம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது.
ஒரு முறை பாஞ்சாலை நாடு கடும் வறட்சியில் சிக்கித் தவித்தது. அப்போது பூரியசஸ் என்ற மன்னன் நாட்டை ஆட்சி செய்து வந்தான். திடீரென்று அவனது நாட்டை, எதிரிகள் கைப்பற்றிக் கொண்டனர். மன்னன் எதிரிகளின் கையில் சிக்காமல், தன் மனைவியுடன் காட்டுக்குள் தப்பி ஓடினான். அங்கு சில முனிவர்களை சந்தித்தான். அவர்களிடம், 'என்னுடைய இந்த நிலைக்கு என்ன காரணம்?' என்று கேட்டான். பூர்வ ஜென்மத்தில் நீ செய்த பாவங்கள் காரணமாக உனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. அதே போல் அட்சய திருதியை தினத்தில் நீ செய்த தண்ணீர் தானம்தான், உன்னை மன்னராக ஆக்கியிருக்கிறது. இருப்பினும் நீ செய்த பாவங்களின் பலனை அனுபவிக்க வேண்டும்' என்றனர்.
இதையடுத்து அந்த மன்னன் காட்டில் வசித்தபடி, நாராயணரை நினைத்து தியானம் செய்து வந்தான். மேலும் அட்சய திருதியை நாளில், வெயிலில் வருபவர்களுக்கு நிழல் கொடுத்தும், குடிநீர் தானம் செய்தும் தொண்டு செய்து வந்தான்.
மன்னனின் தொண்டைக் கண்டு ஸ்ரீமன் நாராயணர் அவனுக்குக் காட்சியளித்தார். மன்னன் இறைவனிடம், 'சுவாமி! நான் அடுத்த பிறவியில் புழுவாய் பிறந்தாலும், உன்னிடம் மாறாத பக்தி கொண்டவனாக இருக்க வேண்டும்' என்றான். அதற்கு இறைவனும் அவன் எண்ணப்படியே வரம் கொடுத்தார்.
பூரியசஸ் மன்னனுக்கு, மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள் அட்சய திருதியை ஆகும். அவன் செய்த தானத்தின் பலனாக, சில நாட்களில் உறவினர்கள் சிலர் உதவியுடன், மீண்டும் ஆட்சியைக் கைப் பற்றினான். அதன்பிறகு நல்ல முறையில் ஆட்சி செலுத்தினான்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.